நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், “கொரோனா இரண்டாவது அலையில் நாம் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனைப்போலவே மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா இரண்டாவது அலை நம்மிடமிருந்து பலரையும் பறித்துக் கொண்டது என்று கூறி பிரதமர் மோடி கண் கலங்கினார்.
மேலும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது ஒரு பக்கமிருக்க கருப்பு பூஞ்சை என்ற நெருக்கடியும் தற்போது சேர்ந்துள்ளது. அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். நாம் பதட்டம் இல்லாமல் இருக்கும் தருணம் அல்ல. அச்சுறுத்தலை அனைவரும் சமாளிக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.