நாட்டிலேயே முதன்முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சையானது ஸ்டான்லி மருத்துவமனையில் செய்யப்பட்டது என்று முதல்வர் தெரிவித்தார்.
தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு ,சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், அம்மா உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18,000 ரூபாய் நிதி உதவி தொகையாக வழங்கி வருகின்றோம். இந்தியாவிலேயே மிக அதிக அளவாக தமிழகத்தில் மட்டுமே 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்று வருவது இந்த திட்டத்தின் வெற்றியை காட்டுகின்றது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், வளரிளம் பெண்களுக்கு சுகாதார திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம், அம்மா ஆரோக்கியத் திட்டம், முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அம்மா மருந்தகம் போன்ற பல திட்டங்களை தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது. உடலுறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து ஐந்து வருடங்களாக தேசிய அளவில் மிகச் சிறந்த மாநில விருதைப் பெற்று வருகிறது.
உடலுறுப்பு தானத்திற்கு மிக சிறந்த மருத்துவமனைக்கான விருது சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது. மேலும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்த கைகளை தானமாக பெற்று திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு பொறுத்தி நாட்டிலேயே முதன்முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சையானது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது என்று முதல்வர் தெரிவித்தார்.