நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கம்பனூர் காலனி பகுதியில் விவசாயியான மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் காவலுக்காக நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் மாரிச்சாமி தூக்கத்திலிருந்து விழித்து வீட்டிற்கு வெளியே டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது திடீரென நாய் காணாமல் போனது.
மேலும் நாய் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு மர்ம விலங்கின் கால் தடங்கள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது பதிவானது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதியானது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.