குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்னவாக்கத்தில் மனோகர்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இரவு நேரங்களில் மனோகர் தொழிற்சாலையில் தங்குவது வழக்கம். கடந்த 6-ஆம் தேதி தொழிற்சாலையில் தங்கிய மனோகர் மறுநாள் காலை வீட்டிற்கு வராததால் சந்தேகம்டைந்த அவரது தந்தை முத்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் மனோகர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மனோகரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குடிபோதையில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததால் சிமெண்ட் கற்கள் மீது முகத்தின் தாடை மோதி மனோகர் இறந்தது தெரியவந்தது.
ஆனாலும் மனோகரின் காது பகுதி அறுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் மருத்துவர்களிடம் கேட்டனர். அப்போது விலங்குகள் கடித்ததால் தான் மனோகரின் காது பகுதியில் காயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக மனோகரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது 2 நாய்க்குட்டிகளின் முகம் முழுவதும் ரத்தக்கறை இருந்தது. இதனால் இறந்து கிடந்த மனோகரின் காதை நாய்க்குட்டிகள் தான் கடித்தது என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.