கடந்த 2020ஆம் வருடத்தில் ஊரடங்கின் காரணமாக நாய்கள் அதிகமாக காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளது.
பிரிட்டனில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 320 வழக்குகள் நாய்கள் திருடு போனதற்காக பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வருடத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அதாவது கடந்த 2019 ஆம் வருடத்தில் பிரிட்டன் முழுவதும் மொத்தமாக 170 வழக்குகள் நாய்கள் திருடு போனதாக பதிவாகியுள்ளது. இதனால் இந்த 2020 ஆம் வருடம் இதுவரை இல்லாத அளவில் “மிக மோசமான வருடம்” என்று Dog Lost என்ற தன்னார்வ சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பிரிட்டனில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதனால் பலருக்கு தங்களின் வீடுகளில் விளையாடுவதற்கும், பொழுதை கழிப்பதற்கு மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் ஒரு செல்லப்பிராணி தேவைப்பட்டுள்ளது. எனவே பலர் விலையுயர்ந்த வளர்ப்பு நாய்கள் மற்றும் பிற செல்லப் பிராணிகளையும் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் விலங்குகளை விற்பனை செய்து சிலர் லாபம் பார்க்க நினைத்துள்ளனர்.
இதனால் நாய்களை வளர்த்து அதன் குட்டிகளை விற்பனை செய்து தொழில் செய்து வருபவர்கள் இந்த ஊரடங்கை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தான் கடந்த வருடம் நாய்கள் திருட்டு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது என்றும் கூறியுள்ளனர். மேலும் கடந்த 2020ஆம் வருடத்தில் காணாமல் போன நாய்களை மீட்க 125% அதிகமான அழைப்புகள் வந்துள்ளதாக Dog Lost அமைப்பினர் கூறியுள்ளனர்.
மேலும் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தான் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்திருப்பதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து Dog Lost அமைப்பினர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதாவது நாய்கள் வீட்டைவிட்டு வெகு தொலைவு சென்றாலும் அவை திரும்பி உரிமையாளரிடமே வருவதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். மேலும் நாய்களுக்கு மைக்ரோசிப் ஒன்றை பொருத்தி பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்