இரவு நேரத்தில் கரடி ஆக்ரோஷமாக பெண்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் மகாத்மா காந்தி காலணியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாரின் பக்கத்து வீட்டினரின் நாய் குட்டி காணாமல் போனது. இதனால் முத்துக்குமாரின் மனைவி சுப்புலட்சுமி, பக்கத்து வீட்டுப் பெண்கள் இணைந்து நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு நாய்க்குட்டியை தேடியுள்ளனர்.
அப்போது திடீரென அங்கு வந்த பெரிய கரடி பெண்களை கோபத்துடன் துரத்தி சென்றது. இதனால் பெண்கள் அலறியடித்து கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பின்னர் கரடி அங்கிருந்து சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.