20க்கும் மேற்பட்ட நபர்கள் நாய்கள் கடித்ததால் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள சொக்கலிங்கபுரம் உச்சிசாமி கோவில் தெருவில் கடந்த சில வாரங்களாக நாய்களின் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டவர்கள் நாய்கள் கடித்ததால் படுகாயம் அடைந்து அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேருக்கு அதிகமாக கடி பட்டதால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் தடுப்பூசி போட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “உச்சிசாமி கோவில் தெரு பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. தற்போது 20க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்துள்ளன. இதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவிக்கும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.