திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவை சேர்ந்த 12- ஆம் வகுப்பு மாணவி சுருதி என்பவர் கலந்து கொண்டார். இந்நிலையில் சுருதி 10 தெரு நாய் குட்டிகளை இரண்டு பையில் எடுத்துக் கொண்டு தனது தாய் கிரிஜாவுடன் வந்துள்ளார். அப்போது மனு கொடுக்க காத்திருந்த இடத்தில் சுருதி நாய்க்குட்டிகளை பையில் இருந்து எடுத்து வெளியே விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுருதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது தெருவில் ஒரு பெண் நாய் 9 குட்டிகளை ஈன்றது. சிலர் வெந்நீர் ஊற்றி நாயை குட்டிகளை கொன்று விடுவதாக சொல்கின்றனர்.
மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறம் ஒரு நாய்க்குட்டி வாகனத்தில் அடிபட்டு 2 கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கிறது. அதனையும் சேர்த்து 10 நாய் குட்டிகளை இங்கு எடுத்து வந்துள்ளேன். எனவே உணவு கொடுத்து நாய் குட்டிகளை பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி, நாய்க்குட்டிகள் அனாதையாக தெருவில் சுற்றுவதை தடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சிலர் நாய்க்குட்டிகள் சிலவற்றை வீட்டில் வளர்ப்பதற்காக எடுத்து சென்றனர். அந்த மாணவியின் செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.