பெரம்பலூரில் முகமூடி அணிந்த கும்பல் வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் காலனியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் வெள்ளையன் என்பவரை கடந்த 24-ஆம் தேதி நாய் ஒன்று கடித்துள்ளது. இதன் காரணமாக வெங்கடேசபுரம் காலனி பகுதியில் நடமாடும் நாய்களை பிடிக்குமாறு பெரம்பலூர் நகராட்சிக்கு வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி வெங்கடேசபுரம் காலனி பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களை கடந்த 25-ஆம் தேதி நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் வெள்ளையன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திடீரென்று நாய்களை பிடித்து செல்லுமாறு எப்படி நகராட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம் என்று கேட்டு வெள்ளையனிடம் தகராறு செய்துள்ளனர்.
அதன்பின் வெள்ளையன், அவருடைய மகன் ஜீவானந்தம், மனைவி கண்ணகி, மருமகள் பிரேமா ஆகிய 4 பேரையும் கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் முகமூடி அணிந்த அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளது. இதில் நான்கு பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தாக்குதல் நடத்திய அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.