பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயது மூதாட்டி மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 517 பேருக்கு சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதில் கொரோனா தொற்று 2,276 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2491 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த பெரம்பலூர் கல்யாண நகர் பகுதியை சேர்ந்த 75 வயதான மூதாட்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனாவால் பெரம்பலூர் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.