தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளையுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைகிறது என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்தது. இதனையடுத்து ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு தொடங்கியது.
தற்போது வரை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 28,801 மாணவ மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவற்றுள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருக்கின்ற அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 19,157 விண்ணப்பங்களும், தனியார் கல்லூரிகளில் இருக்கின்ற நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,644 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,492 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,804 பேரும் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு நாளை கடைசி நாள். அதன்பிறகு 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு நடக்க இருக்கும் கலந்தாய்வு பற்றிய அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்கம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.