டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் நாளை இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய மாபெரும் டிராக்டர் பேரணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் நடத்திய தடியடி தாக்குதல் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் விவசாய போராட்டம் நடைபெறும் காசிப்பூர், சிங்கு, திகிரி ஆகிய பகுதிகளில் நாளை இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு கருதி இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.