வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி நிவர் புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது. இந்த நிவர் புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்து சென்றுள்ளது . அந்த புயல் நேற்று ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நிலைகொண்டிருந்துள்ளது. இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறுகையில், “தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் வலுவிழந்த நிலையில் இருந்த நிவர் புயல் , தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திராவின் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவுகின்றது. எனவே ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்பட வடமேற்கு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 நேரத்தில் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, பின்னர் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வரும் 30-ம் தேதி (நாளை மறுதினம்) மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். எனவே வரும் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தாழ்வு மண்டலத்தில் இருந்து தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றி வரக்கூடிய நாட்களில் கணிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.