நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை பள்ளிகள் திறக்கப்படாது என்றும், கொரோனா குறைந்து ஏதுவான சூழல் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் நாளை 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள்,பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.