தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகிறது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் அது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.