நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய தொற்றாக இருப்பதால் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அதனால் தொற்று அதிகம் பரவாமல் தடுக்க தொற்று பாதித்த மாநிலங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மணிப்பூர், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரிபுராவில் நாளை முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் நாளை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு ஜனவரி 20-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு பூங்கா 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.