தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும். மக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய துறை ஏற்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.