ஒவ்வொரு மாதத்திலும் புதிய விதிமுறைகள் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம் ஆகும். பெரும்பாலும் இந்த விதிமுறைகள் அனைத்தும் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். அதுமட்டுமல்லால் இந்த விதிமுறைகள் பெரும்பாலும் சாமானிய மக்கள் சார்ந்ததாகவே இருக்கின்றன. அதன்படி பிப்ரவரி முதல் என்னென்ன விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பதை பார்க்கலாம்.
மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி பிப்ரவரி மாதத்திற்கும் சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு சிலிண்டர் விலை 915 ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதில் ஏராளமான விதிமுறைகள் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே அனைவரின் கவனமும் பட்ஜெட்டை எதிர்நோக்கி இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி எஸ்பிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான விதிமுறையை மாற்றி இருக்கிறது. அதன்படி ஐஎம்பிஎஸ் (IMPS) பரிவர்த்தனைக்கான வரம்பை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. மேலும் IMPS பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணத்தையும் எஸ்பிஐ வங்கியானது ரத்து செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி எஸ்பிஐ YONO ஆப் மூலமாக IMPS முறையில் 5 லட்சம் ரூபாய் வரை சேவைக் கட்டணம் இன்றி பணம் அனுப்பலாம். இது பிப்ரவரி 1 (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
பாங்க் ஆப் பரோடா விதிகளில் மாற்றம்
பிப்ரவரி 1 நாளை நடைபெறும் மாற்றங்களில் பேங்க் ஆஃப் பரோடாவின் காசோலை அனுமதி விதியும் இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் நாளை முதல் காசோலை செலுத்துவதற்கான பாசிடிவ் பே ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது இப்போது காசோலை குறித்த தகவல்களை அனுப்ப வேண்டும், அப்போதுதான் உங்கள் காசோலை கிளியர் ஆகும். இந்த மாற்றங்கள் ரூபாய் 10 லட்சத்திற்கு மேலான காசோலைகளின் கிளியரன்சுக்கானது.
கண்டிப்பு காட்டிய PNB
பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) மாற்றப்பட்ட விதிகளின் தாக்கம் அதன் வாடிக்கையாளர்கள் மேல் நேரடியாக இருக்கும். உங்கள் கணக்கில் பணம் இல்லாமல் தவணை அல்லது முதலீடு தோல்வி அடைந்தால், நீங்கள் ரூ 250 அபராதம் செலுத்த வேண்டும். இதுவரையிலும் இந்த அபராதம் 100 ரூபாயாக இருந்தது. தற்போது நாளை முதல் நீங்கள் இதற்கு அதிக தொகை செலுத்த வேண்டும்.
பிப்ரவரி 1 (நாளை) பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இதில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட வேண்டுமென்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.