காரைக்குடி திருவாரூர் மார்க்கத்தில் நாளை முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தில் கேட் கீப்பர் இல்லாத காரணத்தினால், மொபைல் கேட் கீப்பர்களை பயன்படுத்தி, ரயில்கள் இயங்கி வருகின்றது. இதனால் பயணம் செய்யும் நேரம் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காரைக்குடியில் இருந்தும் ரயில் சேவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்குடி திருவாரூர் மார்க்கத்தில் நாளை முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு காரைக்குடியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில், மாவூர், திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை என முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.