தமிழகத்தில் நாளை வேலைக்கு வராத போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தினால் 90% அரசுப் பேருந்துகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனை என அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அண்ணா தொழிற்சங்கம், பாமக, தேமுதிக மற்றும் பாஜக உள்ளிட்ட ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நாளை வேலைக்கு வராத அவர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.