Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளை விடிய விடிய கண்விழித்து… மகா சிவராத்திரி திருவிழா… சிவாலயங்களில் சிறப்பு பூஜை..!!

காரைக்குடி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

அகிலத்தையே காக்கும் சிவபெருமானுக்கு உகந்த நாளில் மகா சிவராத்திரியும் ஒன்றாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் வரும் சதுர்த்தசி ஆகும். இந்த மகாசிவராத்திரி நாளில் அனைவரும் விடிய விடிய விழித்திருந்து சிவனின் மந்திரத்தை ஒலித்து சிவபெருமானின் அருளைப் பெறுவர். இந்த மகா சிவராத்திரி நாளை வருகிறது. சிவ மகா சிவராத்திரியில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு இம்மையில் வேண்டிய பலனும், மறுமையில் வீடுபேறும் கிடைக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. அதன்படி சிவகங்கையில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெறுகின்றது.

சிவகங்கை காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் உள்ள திருவீசர், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர் கோவில், இளையாத்தங்குடி கைலாசநாதர் கோவில், இலுப்பைக்குடி தான்தோன்றி ஈசர் கோவில், மருதீசர் கோவில், வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில், வேலங்குடி கண்டீசுவரர், நேமம் செயங்கொண்ட சோழீசர் கோவில், இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவில், திருப்பத்தூர் திருத்தளி நாதர் கோவில், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில், பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோவில் ஆகிய பல கோவில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் மாலை 6 மணி முதலே சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன் பின் இரவு 10 மணியளவில் இரண்டாவதாக சிறப்பு அபிஷேகமும், நள்ளிரவு ஒரு மணியளவில் மூன்றாவதாக சிறப்பு அபிஷேகமும், இதையடுத்து காலை 4 மணிக்குள் நான்காவது சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இதில் பக்தர்கள் விடிய விடிய உறங்காமல் விழித்திருந்து சிவ மந்திரம் உச்சரித்து வழிபடுவர். இந்த மகா சிவராத்திரியில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் சிவபுராணமும் நடைபெறும் இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படும்.

Categories

Tech |