உலகின் முன்னணி பணக்காரரான எலான்மஸ்க், டுவிட்டரை சென்ற வாரம் தன் வசப்படுத்தினார். அவ்வாறு எலான்மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை அடுத்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது அரசியல்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்குகளில் “புளூ டிக்” பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டு இருக்கும். இதன் வாயிலாக குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் பல அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் டுவிட்டர் புளூ டிக்கிற்கு இனிமேல் மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட இருப்பதாக எலான்மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அத்துடன் கட்டணம் செலுத்துவோர் வீடியோ, ஆடியோ ஆகியவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகவருவாய் தேவை எனவும் வருவாயை உருவாக்க விளம்பரதாரர்களை மட்டும் நம்பியிருக்க முடியாது எனவும் அவர் டுவிட்டரில் விளக்கியுள்ளார்.
புளூ டிக்குரிய சரிபார்ப்பு செயல்முறைக்காக டுவிட்டர் என்ஜினியர்களுக்கு நவம்பர் 7ஆ ம் தேதிக்குள் பணம் செலுத்தி சரிபார்ப்பு வசதியை துவங்க வேண்டும் (அ) வேலையிழக்க நேரிடும் என எலான்மஸ்க் கெடு விதித்துள்ளார். சில டுவிட்டர் ஊழியர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரமும் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என சிஎன்பிசி ஆதாரங்கள் கூறுகிறது. ஓவர்டைம் ஊதியம் (அ) வேலை நேரம் (அ) வேலை பாதுகாப்பு பற்றி எந்த விவாதமும் இல்லாமல் கூடுதல் நேரம் வேலை செய்யும்படி ஊழியர்கள் கேட்கப்பட்டுள்ளனர். என்ஜினியர்களுக்கு நவம்பர் தொடக்கத்தில் காலக் கெடு வழங்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தவறினால், வேலையை இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது. எலான்மஸ்க் 50 % ஆட்குறைப்பு என மிரட்டி, ஊழியர்களை உத்தரவுக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.