உத்திரபிரதேசத்தில் உள்ள உன்னாவோ என்ற நகரில் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா மேடையில் அமர்ந்து பேச்சாளர்களின் பேச்சை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் கம்பு ஊன்றியபடி தட்டுத்தடுமாறி நடந்து வந்த வயதான விவசாயி ஒருவர் எம்எல்ஏவின் அருகில் வந்து அவருடைய கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்துள்ளார். இந்நிலையில் அந்த எம்எல்ஏக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த கட்சியினர் மேடையிலிருந்து அந்த விவசாயியை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே அந்த விவசாயி கூறுகையில், “நான் எம்எல்ஏவை பாசமாக தான் கன்னத்தை தொட வந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக கன்னத்தில் அடிப்பது போல் கை தவறி விட்டதாக” விளக்கம் அளித்துள்ளார்.