நிச்சயதார்த்தம் முடிந்து எடுக்கப்பட்ட போட்டோசூட்டின் போது இளம்ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தற்போதைய காலகட்டத்தில் புகைப்படம் என்பது பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. நினைவுகளை புகைப்படங்களாக சிறைப்பிடிக்க பலரும் நினைக்கின்றனர். குறிப்பாக திருமணம் போன்ற நிகழ்வுகளில் புகைப்படத்தின் பங்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இதனால் திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு பின்பு என ஏராளமான போட்டோஷூட் எடுக்கப்படுகின்றன. அதோடு சமூக வலைதளங்களில் இந்த போட்டோ ஷூட் பேசுபொருள் ஆகியும் வருகின்றது. இந்நிலையில் மைசூரில் சசிகலா சந்துரு ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது.
இதனை தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி திருமணம் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு முன்பு எடுக்க வேண்டிய போட்டோ ஷூட்டை காவிரி ஆற்றில் வைத்து எடுத்துள்ளனர். மீனவர் ஒருவருடன் ஆற்றில் இளம் ஜோடி தோணியில் அமர்ந்து இருக்க திடீரென தடுமாறி தண்ணீரில் விழுந்தனர். மீனவர் பத்திரமாக கரை ஏறிய நிலையில் இளம் ஜோடி பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்தவர்கள் இருவரது உடலையும் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.