இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த வருண் என்பவருடன் பேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதால் வருண் அந்த இளம்பெண்ணை நேரில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கோயம்புத்தூருக்கு வந்த வருண் இளம்பெண்ணுடன் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வருண் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு வருண் பலமுறை வரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வருணின் தாயார் ரேகா, சித்தப்பா சந்தோஷ் ஆகியோர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதனை அடுத்து இளம்பெண்ணிடம் வருண் அடிக்கடி பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இளம்பெண் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் வருண் அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
மேலும் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டதற்கு வருண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு வருணின் தாய் மற்றும் சித்தப்பா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வருண், ரேகா, சந்தோஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.