நடிகர் வடிவேலுவின் பாணியில் கிணற்றை காணவில்லை என்று தென்காசியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பஞ்சாயத்துகுட்பட்ட சிவராமபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றின் மேல் நாகம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அதை அகற்றுமாறு அந்த ஊரைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது பொதுமக்கள் திரண்டதால் அதிகாரிகள், கிணற்றின் மீதுள்ள கோவிலை அகற்றாமல் திரும்பி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது கிணற்றின் மீதுள்ள ஆக்கிரமிப்பை 2 மாதங்களுக்குள் அகற்றுமாறு ஐகோர்ட்டு போன வருடம் 29-11-2019 அன்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சில நாட்களுக்கு முன்பு கிணற்றின் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது கோவில் நிர்வாகத்தினர் 10 நாட்களுக்குள் தாங்களாகவே கிணற்றின் மீதுள்ள கோவிலை அகற்றுவதாக தெரிவித்த நிலையில் அவர்கள் கோவிலை சுத்தியலால் இடிக்கத் தொடங்கினர். எனவே காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
ஆனாலும் பஞ்சாயத்து கிணற்றின் மீதுள்ள கோவில் இன்னும் அகற்றப்படாத நிலையில் தற்போது பஞ்சாயத்து கிணற்றை காணவில்லை என்று சிவராமபேட்டை மற்றும் கடையநல்லூர் யூனியன் அலுவலக பெயர் பலகையிலும் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. நடிகர் வடிவேலு ‘கண்ணும் கண்ணும்’ என்ற திரைப்படத்தில் தனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும் காட்சி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததைப் போன்று தற்போது சிவராமபேட்டையிலும் ‘பஞ்சாயத்து கிணற்றை காணவில்லை’ என்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.