மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.
கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் போதியளவு நிதி இருந்தும் வளர்ச்சி பணியை செய்யாமல் காலத்தை கடத்துகின்றனர். மேலும் முறைப்படி மன்ற கூட்டங்கள் நடத்துவது இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு பதிவு தபால் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் வளர்ச்சி பணி செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி வார்டு உறுப்பினர் நாகராஜ், முருகேசன், விநாயகமூர்த்தி, ராணி ஆகிய 4 பேரும் கடந்த 17ம் தேதி மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் திடீரென்று போராட்டம் நடத்தினார்கள்.
மேலும் அவர்கள் ஊராட்சி தலைவர், துணைத் தலைவரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதை ஏற்றுக்கொண்டு வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.