சேரன்மகாதேவியில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக கூறி பெண்களிடம் பண மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சேரன்மகாதேவி காந்தி பார்க் அருகில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேரும் பெண்களுக்கு 60 ஆயிரம் வரையிலும் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி ஏராளமான பெண்கள் அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மேலும் இதில் உறுப்பினராக சேர்வதற்கு ஒவ்வொருவரும் தலா 2000 வீதம் நிதி நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஏராளமான பெண்களிடம் 2000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகை பல லட்சக்கணக்கில் இருக்கலாம் என அப்பெண்கள் கூறியுள்ளனர். ஆனால் யாருக்கும் கடன் உதவி வழங்கவில்லை. சிறிது நாட்கள் சென்றதும் அந்த நிதி நிறுவனம் திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் பேச முயன்ற போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத்தொடர்ந்து தாங்கள் ஏமாந்ததை உணர்ந்த பெண்கள் சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தங்கள் பணத்தை திரும்பப் பெற்று தருமாறு மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.