வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய நிதி நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் பெற்ற வீட்டுக்கடனை ஐந்து மாதங்களாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த நிறுவன ஊழியர் பெர்லிக்ஸ் சகாயராஜா சேகர் பணிபுரியும் இடத்திற்கு சென்று தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேகர் கடந்த 31-ஆம் தேதி பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உள்ளார்.
இதில் படுகாயமடைந்த சேகரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சேகரை தற்கொலைக்கு தூண்டிய பெர்லிக்ஸ் சகாயராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.