புதுப்பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய செல்போன் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அறுகுவிளை பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோஜ் அபிராமியின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அபிராமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை எடுத்து வினு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் மனோஜின் தாயார் நாகேஸ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் எனது மகளிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இதனால்தான் அபிராமி தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அபிராமியின் செல்போனை கைப்பற்றினர். அதில் அபிராமி பேசிய உருக்கமான ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அபிராமி கூறியதாவது, அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். மனோஜி அம்மாவும், பாட்டியும் என்னை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள். எனது கணவரும் எவ்வளவோ சமாளித்து பார்த்தும் அவராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
அவர் ஏதாவது செய்துவிட்டால் வயிற்றில் வளரும் குழந்தையை வைத்துக்கொண்டு நான் கஷ்டப்பட வேண்டும். எனவே நான் போய்விட்டேன் என்றால் மனோஜ் வீட்டில் எதுவும் பேச மாட்டார்கள். நீங்களும் கஷ்டப்பட வேண்டாம். மூன்று நாட்களாக தூக்குபோட்டு சோதனை செய்து பார்த்தேன். நான் சாகப் போகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் எனக்காக கொடுத்த நகை மற்றும் பொருட்களை திருப்பி வாங்கி கடனை அடைத்து விடுங்கள். எனது சாவுக்கு மனோஜின் அம்மாவும், பாட்டியும் தான் காரணம் என அபிராமி பேசியுள்ளார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.