நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு-ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரிகள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு என படித்து வருகின்றனர்.
இந்த துறைக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிரந்தரமான பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் வந்து வகுப்பு நடத்துகின்றனர். இது குறித்து மாணவர்கள் பலமுறை கல்லூரி முதல்வரிடம் ஆசிரியர்கள் நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க கோரி செய்யாறு-ஆற்காடு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.