பேருந்து மீது பீர் பாட்டிலை வீசி பயணியை காயப்படுத்திய 4 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து துருகம் சாலையில் சென்ற போது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் பேருந்தை நிறுத்துமாறு கை காட்டியுள்ளனர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பீர் பாட்டிலை பேருந்து மீது வீசியுள்ளனர்.
இதனால் பேருந்தில் பயணம் செய்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.