அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மின்வெட்டு குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, “நிலக்கரி பற்றாக்குறையானது உலக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டுமே உதவக்கூடிய நிலக்கரி உள்ளது. மேலும் நிலக்கரியின் தினசரி தேவையான 62 ஆயிரம் டன் என்ற தேவையில், இந்திய நிலக்கரி நிறுவனமானது 60 சதவீத நிலக்கரியை தான் தமிழகத்தில் அனுப்புகிறது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படும் நிலை உருவாகி மக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவர்கள்.
தற்போது இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கின்ற தமிழகத்தின் பொருளாதார நிலைமையும் வீழ்ச்சியடையும். எனவே இதனை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. ஆகவே இதனை தமிழக முதல்வர் கருத்தில் கொண்டு மத்திய நிலை துறை அமைச்சரை தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு, தமிழக அரசின் சார்பாக ஒடிசா மாநிலம் சந்திரபிலா நிலக்கரி தொகுதியில் நிலக்கரியை எடுக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அனுமதி பெற தேவையான அழுத்தத்தை கொடுத்து மேம்பாட்டு பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.