திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே வாகன சோதனையின் போது பிஸ்கேட் வியாபாரியிடம் இருந்து ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர், அதிகாரி ரேவதி தலைமையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மினி வேன் ஒன்று வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த மினி வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ. 88 ஆயிரத்து 445 ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இது குறித்து மினி வேனில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வத்தலகுண்டு பள்ளிவாசல் பகுதியில் வசித்து வரும் பிஸ்கட் வியாபாரி அசன் முகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.