திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வைகை, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றது. விவசாயத்தை பிரதானமாக நம்பியிருக்கும் இந்த பகுதியில் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் தொழிலும் நடைபெறுகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
1952 மற்றும் 1957இல் சோழவந்தான், நிலக்கோட்டை என இரட்டை தொகுதியாக இருந்து நிலக்கோட்டை 1962ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. தனி தொதியான நிலக்கோட்டையில் நடைபெற்றுள்ள 16 தேர்தல்களிலும் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 3முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. புதிய தமிழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் தல ஒரு முறை வென்றிருக்கிறார்கள்.
தற்போது எம்எல்ஏவாக அதிமுகவின் தேன்மொழி உள்ளார். அதிக பெண் வாக்காளர்கள் உள்ள நிலக்கோட்டையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,42,823 பேர். பூ விவசாயம் அதிக அளவில் உள்ளதால் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பதும், வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. நிலக்கோட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும், வத்தலகுண்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்கள் என வத்தலகுண்டு வழியாக செல்லும் வாகனங்கள் அதிகமென்பதால் புறநகரில் தனியாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில்களும் கொடைரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையும் உள்ளது.
வத்தலகுண்டு சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் விருப்பம். விரிவேட்டில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை கொண்டு வருவோம் என அதிமுக எம்எல்ஏ அளித்த வாக்குமூலம் நிறைவேற்றப்படவில்லை என குற்றச்சாட்டுகளும் உள்ளது. விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவுக்கு வத்தலகுண்டில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
திண்டுக்கல் சபரிமலை இடையே வத்தலகுண்டு வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும், வைகை ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து நிலக்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களை நிரப்ப புதிய நீர்ப்பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நிலக்கோட்டை தொகுதி மக்களின் கோரிக்கை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.