உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டவிரோதமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் தற்போது இந்த போரானது மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷ்யா போராடி வருகிற நிலையில் உக்ரைன் ராணுவம் அந்த மாகாணங்களை மீட்டெடுப்பதற்கு விடாமல் போரிட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 4 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கிழக்கு உக்ரைனின் பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துள்ளனர். மேலும் அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கே இடமில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.