உத்தரப்பிரதேசத்தில் நிலாவைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறி 25 வது மாடியிலிருந்து சிறுவர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யநாராயணன், சூரியநாராயணன் எனும் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த சிறுவர்கள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுவர்கள் இருவரும் வீட்டின் பால்கனிக்கு சென்று நிலாவை பார்க்கவேண்டும் என்று தாயிடம் கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தாய் அவர்களது அறைக்குள் சென்று உறங்குமாறு கூறியுள்ளார்.
பின்னர் தாய் அவருடைய அறையில் சென்று உறங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து நள்ளிரவு ஒரு மணியளவில் சிறுவர்கள் இருவரும் அறையில் இருக்கிறார்களா? என பார்ப்பதற்கு தாய் கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் அங்கு இல்லை. பின்னர் அவர்களுடைய தாய் தொடர்ந்து தேடியதில் சிறுவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி கீழே விழுந்து கிடந்துள்ளனர். பின்னர் சிறுவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவர்கள் இருவரும் பால்கனிக்கு சென்று நிலவை பார்ப்பதாக கூறி தவறிக் கீழே விழுந்து இறந்து இருக்கலாம் தெரியவந்துள்ளது. இல்லை இதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.