மொபட் கீழே விழுந்து விபத்தடைந்ததில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வீராணம்பாளையம் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி தனது மொபட்டில் கபிலர்மலைக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது இருக்கூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மொபட் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக மோகனசுந்தரத்தை சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.