திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் இரும்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானதில் மகன் கண் முன்னே தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சிவசக்தி என்ற மகன் உள்ளார். சிவசக்தியுடன், கருப்புசாமி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தனது தம்பி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஊரிலிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சிவசக்தி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மோட்டார் சைக்கிள் மதுரை-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் கொடைரோடு அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த இரும்பு கம்பியின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மகன் கண்முன்னே கருப்புசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவசக்திக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவர் தன் கண்முன்னே தந்தை இறந்ததை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சிவசக்தியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கருப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.