பயங்கர விபத்தில் சப்-கலெக்டர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியராக ராஜாமணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுந்தரம் என்ற கணவர் இருக்கிறார். இவர்களுக்கு சிந்து என்ற மகளும் விக்ரம் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜாமணி தனது குடும்பத்துடன் சேர்ந்து பழனியம்மாள் என்பவரையும் அழைத்து கொண்டு ஆதி திருவரங்கம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை நசீம் பாருக் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த கார் சங்கராபுரம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுமியின் மீது கார் பலமாக மோதியது. அதன்பிறகு ஒரு மின் கம்பத்தில் கார் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோபிகா மற்றும் ராஜாமணி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதன்பிறகு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிந்து, விக்ரம், விக்னேஷ், கிரிஜா, பழனியம்மாள் ஆகிய 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் சுந்தரம் மற்றும் கார் ஓட்டுநர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து திருக்கோவிலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜா மற்றும் திருக்கோவிலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்கள் ராஜாமணி மற்றும் கோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.