மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து தேடப்பட்டு வரும் தாவூத்இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக உறவினர் தகவல் தெரிவித்து உள்ளார். மும்பையில் கடந்த 1993 ஆம் வருடம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அத்துடன் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பற்றிய வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். எனினும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் உட்பட சிலர் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கின்றனர்.
அவர்களை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் தாவூத்இப்ராஹிம் உறவினரான சகோதரி ஹசீனா மகன் அலிஷா பார்க்கரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தாவூத்இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்தார். பாகிஸ்தானின் கராச்சி நகரில் தான் தாவூத்இப்ராஹிம் தலைமறைவாக இருக்கிறார். நிழல் உலக தாதா தாவூத்இப்ராஹிம், பாகிஸ்தானுக்கு தப்பியோடிய சூழ்நிலையில், அவரை நாடு கடத்தும் பணியில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.