ஆன்லைன் ரம்மி விளம்பர விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நடிகர்களாகவேப் பார்த்து திருந்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ‘தமிழகத்தில் போதைப் பொருட்களை விற்பவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன்பின்பு இதனை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்படும். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சில நடிகர்கள் நடிப்பது சம்பந்தப்பட்ட நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.