உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள டெபாசிட் தொகை உயர்வை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர்களின் டெபாசிட் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் டெபாசிட் தொகையை தேர்தல் ஆணையம் உயர்த்தி இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அடிமட்டத்தில் இருக்கும் தொண்டரையும் அதிகாரப் பொறுப்பில் அமர வைக்கும் நகராட்சித் தேர்தலில் டெபாசிட் தொகை உயர்வு என்பது அந்த மக்களுக்கு பெரும் சுமையாக அமையும் அரசியல் உரிமை பறிபோகும்.
தற்போது நாட்டில் கட்சி என்பதே நிறுவனங்களாகவும் பணம் என்பது மூலதனமாகவும் செயல்பட்டு வருகிறது இந்த நிலையை மாற்ற வேண்டிய தேர்தல் ஆணையமே தற்போது டெபாசிட் தொகை அதிகரித்துள்ளது எந்த வகையில் நியாயம் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோருக்கு 4000 ரூபாயும் நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுபவர் 2,000 ரூபாயும் பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஆயிரம் ரூபாயும் தேர்தல் ஆணையம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கான முக்கியத்துவம் இந்த தேர்தலில் அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறாக டெபாசிட் தொகையை ஏற்றுவது பெண்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட கடும் சிரமத்தை கொடுக்கும் எனவே தேர்தல் ஆணையம் இதனைத் திரும்பப் பெற வேண்டும்.” என கேட்டுக்கொள்கிறேன்.