கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் தொடர்ந்து அடாவடியாக நடந்து வருவதாக சில புகார்கள் வந்தது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி காயமடைந்த தம்பதி ஒருவர், அந்த அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது தம்பதியிடம் ரத்தத்தை கழிவறை சென்று சுத்தம் செய்து வந்தால் தான் சிகிச்சையளிப்பேன் என்று அரசு மருத்துவமனை ஊழியர் கூறியுள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். அக்காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் “இது மனித நேயமற்ற செயல் ஆகும். இதுபோன்று தொடர்ந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சில ஊழியர்கள் அடாவடி செய்கின்றனர். அதனை காட்சிப்படுத்த முயற்சித்தபோது, நாங்கள் அரசு ஊழியர்கள். எங்களை ஒன்றும் செய்ய இயலாது என மிரட்டுகின்றனர்” என பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வீடியோ வைரலான சூழ்நிலையில, இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பரமணியமை தொடர்புகொண்டு பேசினர். அவர் “இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நோயாளிகளிடம் பொறுமையாக நடந்துகொள்ள கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறி உறுதியளித்துள்ளார்.