நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்களை முதல்வருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பில் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மற்றும் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதற்கான டெண்டரை வெளிமாநில நிறுவனங்களுக்கு அளித்ததாகவும் பல சர்ச்சைகள் எழுந்து வந்தன.ஆனால் நாம் தமிழர் கட்சி சீமானோ எங்களுக்கு இலவச பொருள்களே தேவையில்லை என்று கூறிவருகிறார்.
அவரைப் பின்பற்றி அவரது கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ ரத்னா என்பவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த பரிசுப் பொருட்கள் குறித்து சீமான் கூறியிருப்பதாவது,”இந்த இலவச பரிசு பொருட்களை எனது தனிமனித வருமானத்தின் மூலம் என்னால் பெற்றுக் கொள்ள இயலும். ஆனால், தரமான இலவச மருத்துவம், தூய காற்று, நல்ல குடிநீர், தரமான இலவச கல்வி. கல்விக்கேற்ற அரசு வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை தனிநபராய் என்னால் பெற இயலாது. என்னால் தனிநபராய் உழைத்து பெற முடிந்த ஒன்றை இலவசம் என்னும் பெயரில் இதுவரை நான் பெற்று எனது சுய மரியாதையை இழந்தது போதும்.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் படித்து முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் இளைய பிள்ளைகளுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும், மேற்கூறிய மக்களின் அடிப்படைத் தேவைகளையும் எங்களுக்கு வழங்கி இலவசத்துக்கு கையேந்தும் நிலையிலிருந்து மக்களை உயர்த்தி அவரவரின் தேவையை அவரவரே பணம் செலுத்தி பெற்று நாங்கள் தன்மானத்தோடு வாழ வழிவகை செய்திட வேண்டும் என முதலமைச்சரான உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.