தற்போதைய காலகட்டத்தில் அடிப்படை தேவைகளுக்காக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏதேனும் ஒரு தவறு நடந்தால் அதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அல்லது அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய பிறகு போராட்டங்களை கலைத்து செல்கின்றனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனில் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 3 கவுன்சிலர்கள் தொடர்ந்து 3 யூனியன் கூட்டங்களுக்கு வராததால் அந்த கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் யூனியன் கவுன்சிலர் கூட்டம் நடைபெற உள்ளதாக 15 நாட்களுக்கு முன் யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தபால் அனுப்பியுள்ளார். இந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி போலீஸ் நிலையத்தில் யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோரின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் திடீரென வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், யூனியன் கூட்டத்தை ரத்து செய்தார் என்று யூனியன் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டபடி கூட்டம் நடத்துவதற்காக யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் கவுன்சிலர்கள் வந்த பொது கூட்ட அரங்கு திறக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து யூனியன் தலைவர் பஞ்சவர்ணம், யூனியன் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மூன்று பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எந்த அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்ததால் தலைமையிடம் உத்தரவு பெற்று போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் திருச்சுழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் அய்யோ தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.