மதுரை மாநகராட்சியில் தீனதயாள் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு 250 சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டிகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2018ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் 2018ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த பொழுது 55 பைசா நேர்முக வரியாகவும், 55 பைசா மறைமுக வரியாகவும் வசூலிக்கப்பட்டது. பெட்ரோல் வரி 32 ரூபாய் ஆகவும், டீசல் வரி 31 ரூபாயாகவும் தற்போது உள்ளது. செஸ் வரியை மாநிலங்களில் இருந்து எடுத்த மத்திய அரசானது அதனை மாநிலங்களுக்கு அளிக்கவில்லை.
மத்திய அரசானது ஜி.எஸ்.டி., வரம்பில் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வரவேண்டும் கூறவில்லை. மேலும் ஒன்றிய அரசானது உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டதை மட்டுமே எடுத்துரைத்துள்ளது. நீதி மன்றத்தால் ஜி.எஸ்.டி வரி வரம்பை பற்றி எவ்வித ஆணையும் பிறப்பிக்க இயலாது.
மத்திய அரசிற்கு பெட்ரோல், டீசல் மூலமாக மொத்த வருமானத்தில் 20% வருமானம் கிடைக்கின்றது. இதனாலேயே ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர ஒன்றிய மற்றும் மாநில அரசு விரும்புவதில்லை. ஒன்றிய அரசானது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரியை குறித்தும் மக்களுக்கு வரியை இரு மடங்காகவும் உயர்த்தியுள்ளது.
நேர்முகவரியை முழுவதுமாக எந்த ஒரு நாட்டிலும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளாது. பெட்ரோல், டீசல், ஆல்கஹால் ஆகியவற்றிலிருந்து மாநிலங்களுக்கு இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. ஒன்றிய அரசு அனைத்து மாநில வரி வருவாயை எடுத்துக்கொண்டால் மாநிலங்களால் எவ்வாறு நிர்வாகத்தை நடத்த இயலும்?
மாநில அரசானது நிலைமைக்கு ஏற்ப வரியை மாற்றும் உரிமையை இழந்து உள்ளது. தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை, சுற்றுச்சூழல்களில் மாற்றம் நிகழும் போது திமுகவின் நிலைப்பாடும் மாற்றம் அடைகிறது. செஸ் வரியை பெட்ரோல், டீசல் விலையில் இருந்து நீக்கினால் மட்டுமே ஜி.எஸ்.டி.க்குள் தமிழக அரசு வர தயாராக உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.