இந்தியாவில் கிராமப்புறங்களில் சமையல் எரிபொருளாக விறகு, நிலக்கரி, மாட்டுசாணம் ஆகியவை பயன்படுத்துவதற்கு பதில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு இவர்களுக்கென்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்ற 2016 ஆம் வருடம் “பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையும் 9 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இணைவதற்கு 18 வயது மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களாக இருக்க வேண்டும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மானியத்தொகை வழங்கப்படும். ஆனால் கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. அதுமட்டுமின்றி சிலிண்டரின் விலையும் ஒவ்வொரு மாதமும் புது புது உச்சத்தை தொட்டது. அத்துடன் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் சென்ற 2020 ஆம் வருடம் பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இத்திட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கு மானியம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சென்ற சில தினங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் LPG மானியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதாவது அவர் கூறியதாவது “பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 200 மானியத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதனை செயல்படுத்த வருடத்திற்கு ரூ.6100 கோடி வரை அரசுக்கு செலவாகும்” எனவும் கூறியுள்ளார். அத்துடன் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்த அறிவிப்பு சாமானிய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.