செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒரு 50 மாணவர்களை மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அல்லது அரசு கலைக்கல்லூரி அல்லது ஜிப்மர் கல்லூரி போன்ற இடங்களில் அனுமதித்து கொள்ளலாம் என்ற கருத்துரை அளித்தார்கள்.
ஆனால் மதுரையில் இருக்கின்ற தனியார் கல்லூரிகளிலும், அரசு கலைக் கல்லூரியிலும், ஜிப்மர் கல்லூரியிலும் சேர்ப்பது என்பது சரியாக இருக்காது என்ற கருத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. அந்த வகையில் புதிய மருத்துவ கல்லூரி ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டு இருக்கின்ற அந்த மருத்துவ கல்லூரியில் 150 மாணவர் சேர்க்கைக்கு நாம் விண்ணப்பித்து இருந்தோம். 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டு அங்கே கூடுதலாக 50 மாணவர்கள் படிப்பதற்க்கூடிய வசதி இருக்கிறது. எனவே ஒன்றிய அரசின் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
புதிதாக இந்த ஆண்டு சேர்க்க இருக்கின்ற, சேர்ப்பதாக ஒன்றிய அரசு சொல்லிக்கொண்டிருக்கிற இந்த 50 மாணவர்கள் சேர்க்கையை ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் சேர்த்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோம். அந்தவகையில் அவர்களும் அதற்கு உடனடியாக ஒப்புதல் தருவதாக இசைந்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் இருந்து ஒரு 50 மாணவர்களை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்காக மதுரையில் அமைய இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவகல்லூரிக்காக சேர்ப்பது என்கின்ற வகையில் கோரிக்கையை ஏற்கப்பட்டு,
அது ராமநாதபுரத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஆணையை இன்னும் 4, 5 நாட்களில் கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்னாலே அறிவிப்பார்கள் என்று கருதுகிறோம். அந்த வகையில் அதுவுமே விரைவில் வர இருக்கிறது.
புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் 1,450 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையும் இந்த மாதம் நான்காவது வாரத்தில் ஏற்கனவே இருக்கின்ற மாணவர்களோடு சேர்த்து 5,050 மாணவர்களுக்காக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கப்பட இருக்கிறது. அப்பொழுது இந்த எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த 50 இடங்கள் அதிலே வரும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.