உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகப்போவதாக அமெரிக்கா அதிரடியாக தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்ட ‘ஹூ’ அல்லது ‘டபிள்யு.எச்.ஓ’ என்று அழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனம், ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். இந்த அமைப்பு உலகளவில் உள்ள சுகாதாரம் தொடர்பான விவகாரங்களை கையாண்டு வருகிறது. இதில் இந்தியா உள்பட 194 நாடுகள் உறுப்பினர்களாக செயலாற்றி வருகின்றனர். ஆனாலும் இந்நிறுவனத்திற்கான முக்கிய நிதிக்கான பங்களிப்பு அமெரிக்காவோடதுதான். தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி, அதிக உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இத்தகைய கொடிய வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக சீனா அரசு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு சீனா அரசை சார்ந்து உள்ளதாக கூறி, அந்த அமைப்புடனான உறவை துண்டித்துக்கொள்ள கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்திருந்தார். இதனால் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்றும் எச்சரிக்கை விடுத்தார் .
இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தியதால் இந்த அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியது. கடந்த 6-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு இது தொடர்பாக அனுப்பிய கடிதத்ததில், ” உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்கிறது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.” என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அதிபர் டிரம்ப் இத்தகைய முடிவு எடுத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.